தொடர் மழை காரணமாக மோர்தானா அணைக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது

மோர்தானா அணைக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது

Update: 2021-08-27 16:45 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா மற்றும் ஆந்திரமாநில பகுதிகளான புங்கனூர், பலமநேர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர் மோர்தானா அணைக்கு வருகிறது. இந்த அணை 11.5 மீட்டர் உயரம் கொண்டது. 

மோர்தானா அணை பகுதியில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. மூன்று நாட்களில் 141 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பலமநேர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அதனால் அணைக்கு சுமார் 50 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் தற்போது சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையின் நீர் இருப்பு சுமார் 100 மில்லியன் கன அடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மோர்தானா அணைக்கு தண்ணீர் வரும் செய்தி அறிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோர்தானா அணை நிரம்பியது. கடந்த ஜூன் மாதம் அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்