இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்குவதில் சிரமம்

கடந்த ஆண்டு மழைவெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்காததால் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழையை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-27 12:40 GMT
ராமநாதபுரம், 
கடந்த ஆண்டு மழைவெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்காததால் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழையை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிதி இழப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடைசி நேரத்தில் அதிகஅளவு பெய்து விவசாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட் டத்தில் நெல், பருத்தி விவசாயம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கடும் இழப்பை சந்தித்தது. 
விவசாயிகள் அனைவரும் பயிர்காப்பீடு செய்துள்ளதால் பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படாமல் காப்பீடு தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் இதுவரை காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்காததால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொன்னக்கனேரி கிராம விவசாயி மைக்கேல் கூறியதாவது:- தமிழக அரசு விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.24 ஆயிரத்து 337 விவசாயிகளின் 101.54 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டது. 
இழப்பீடு தொகை
மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டுள்ள நிலையில் முதுகுளத்தூர் ஒன்றியம் செம்பொன்குடி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய 14 கிராமங்களை சேர்ந்த 96 விவசாயிகளுக்கு மட்டும் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தும் இதுவரை கடன் தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படவில்லை. இதுதவிர, கடந்த ஆண்டு விவசாயம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இந்த தொகையை வழங்கினால்தான் வருகிற வடகிழக்கு பருவமழை சமயத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். இதுவரை வழங்காததால் எப்படி பயிர்செய்வது என்று கலக்கத்தில் உள்ளோம்.
 இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வு
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 966 விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.300 வீதம் பயிர்காப்பீடு செய்துள்ளனர். இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்திற்கு மாநில அரசு 75 சதவீத நிதியும், மத்திய அரசு 25 சதவீத நிதியும் அளிக்கும். 
இதன்படி மாநில நிதியாக தமிழக அரசு ரூ.ஆயிரத்து 232 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக தீவிர ஆய்வு செய்து வருகிறது. விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்