கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது
கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சுற்றுலா தலம்
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைக்கு செல்கின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வருகிறது.
நேற்று முன்தினம் திடீரென கடல் மட்டம் தாழ்ந்து உள்வாங்கியது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணிநேரம் தாமதமாக 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இயக்கப்பட்டது.
2-வது நாளாக...
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து வந்தனர். காலை 9.30 மணிக்கு திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்து 2-வது நாளாக உள்வாங்கியது. இதனால் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 1 மணிநேரம் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படகுத்துறையில் ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கடல் நீர் மட்டம் சீரானதை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.