ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, நெல்லை வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, நெல்லை வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்க குமரி மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு 22 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரியை, நாகர்கோவிலில் போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான களியக்காவிளையை சேர்ந்த ராஜன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி கலைஞர் (வயது 42) பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவுக்கு லாரியில் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கலைஞரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்தநிலையில், வியாபாரி கலைஞர் கடந்த 5-ந் தேதி நெல்லையில் இருந்து கேரளாவுக்கு 17 டன் ரேஷன் அரிசியை லாரி மூலம் அனுப்பி வைத்தார். அப்போது மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக கலைஞரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கலைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, கலைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கலைஞரை கைது செய்து, நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.