தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு
நிலக்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை-மதுரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன் (வயது 49). இவர் திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருடுபோயிருந்தது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அதில் தலைமை ஆசிரியர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.