324 பள்ளிகளில் முழுவீச்சில் தூய்மை பணிகள்

324 பள்ளிகளில் முழுவீச்சில் தூய்மை பணிகள் நடக்கின்றன.

Update: 2021-08-26 19:41 GMT
பெரம்பலூர்:

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு...
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி அந்த வகுப்புகள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 144 பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் 180 பள்ளிகளும் 1-ந்தேதி முதல் திறக்கப்படவுள்ளன.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் 32,099 மாணவ-மாணவிகளும், அரியலூர் மாவட்டத்தில் 180 பள்ளிகளில் 39,841 மாணவ-மாணவிகளும் கல்வி பயில உள்ளனர். அந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வகுப்பறைகளில் சீரமைப்பு பணிகளும், தண்ணீர் ஊற்றி கழுவும் பணிகளும், கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளும், பள்ளி வளாகங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முககவசம் கட்டாயம்
அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை பணிகளை முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கைகளை அடிக்கடி கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் மாணவ- மாணவிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும், வைட்டமின் மற்றும் துத்தநாகம் மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவ-மாணவிகளும் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்