பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி கடந்த ஒரு ஆண்டில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி கடந்த ஒரு ஆண்டில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

Update: 2021-08-26 18:43 GMT
பல்லடம், 
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி கடந்த ஒரு ஆண்டில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 
பி.ஏ.பி. வாய்க்கால் 
பல்லடம் வட்டாரத்தில் பி.ஏ.பி. பாசன திட்ட வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இது பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, காங்கேயம், உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் பாசனம் திட்டம். இந்த திட்டம் ஆரம்பித்தபோது ஆண்டுக்கு 2 முறை, சுமார் 100 முதல் 130 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
தற்போது ஆண்டுக்கு ஒரு முறையாகிவிட்டது. இந்த நிலையில் பாசன திட்ட வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது, அதில் குளிப்பதற்காக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆசைப்பட்டு வாய்க்காலில் இறங்குகின்றனர். 
50-க்கும் மேற்பட்டவர்கள் பலி 
இதில் ஆர்வக்கோளாறில் நீச்சல் தெரியாமல் இறங்குபவர்களும் உண்டு. இந்த நிலையில் தண்ணீர் வேகமாக வரும்பொழுது சமாளிக்க முடியாமல் தண்ணீரில் அடித்து சென்று உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. நீச்சல் பழக, வாய்க்காலுக்கு செல்லும் சிறுவர்கள், ஆழம் தெரியாமல், வாய்க்கால் சேற்றில் கால்கள் சிக்கி உயிரிழக்கின்றனர். சிலர் ஆளில்லா இடங்களில் குழுவாக சென்று மது அருந்துகின்றனர். பின்னர் போதையில் வாய்க்காலில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்து விடுகின்றனர்.
குடும்ப பிரச்சினைக்காக வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. கடந்த ஒரு ஆண்டில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் வாய்க்காலில் இறங்கி, உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வாய்க்காலுக்கு செல்கிறவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்