கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சி குமரன் நகர் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2021-08-26 17:28 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி குமரன் நகர் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். 

சாலையில் கழிவுநீர் 

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குமரன் நகரில் இருந்து கண்ணப்ப நகர் செல்வதற்கு ரெயில்வே கீழ்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 

மீன்கரை ரோடு, கண்ணப்ப நகர் செல்வதற்கு இந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக ஏற்படுத்தாததால் குமரன் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது.

சுகாதார சீர்கேடு 

அதுபோன்று பாலத்தின் அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து கண்ணப்ப நகருக்கு பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் வாகனங்களில் கழிவுநீரில் நிலைதடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. 

மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவ தோடு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக மனித நேய ஜனநாயக கட்சி சார்பிலும் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இருந்து ரெயில்வே கீழ் மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கண்ணப்ப நகருக்கு 3 கி.மீ. தூரம் வரை சுற்றி வர வேண்டிய உள்ளது. 

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சுகாதாரத்தை பேணும் வகையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்