விழுப்புரம் தபால் நிலையத்தில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது
விழுப்புரம் தபால் நிலையத்தில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதியன்று மாலை 6.15 மணியளவில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரிடம், மணியார்டர் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த ஊழியர் தற்போது மணியார்டர் அனுப்பும் நேரம் முடிந்துவிட்டதால் மறுநாள் வரும்படி கூறியுள்ளார். அப்படியானால் 2 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகளாக சில்லறை தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர், தன்னிடம் சில்லறை இல்லை என்றும் தபால் நிலையத்தில் உள்ள அஞ்சலக கருவூல அறைக்கு சென்று வாங்கிக்கொள்ளும்படி கூறினார்.
அதன்படி கருவூல அறைக்கு அவர்கள் 3 பேரும் சென்றனர். அங்கு ஏற்கனவே வசூலான பணத்தை மேஜை மீது வைத்தபடி கருவூல அலுவலர் சரிபார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் அந்த வாலிபர்களில் ஒருவர், சில்லறை தரும்படி கேட்பதுபோல் அவரது கவனத்தை திசை திருப்பி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மேஜையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை அபேஸ் செய்துகொண்டு வெளியே வந்தனர். பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் அவர்கள் 3 பேரும் ஏறி பழைய பஸ் நிலையம் சென்று அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். அந்த பணக்கட்டில் ரூ.2 லட்சம் இருந்தது.
3 பேர் கைது
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு தப்பி ஓடிய 3 பேரையும் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் திருட்டு வழக்கில் சிச்கிய ஒரு கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஈரான் நாட்டை சேர்ந்த முகமது மகன் ஷியாவல் (வயது 20), ருசன் மகன் ரோஸ்டம் சையிதி (28), டெல்லி நிஜாமுதீனை சேர்ந்த ரகுமான் யூனஸ் அலிபனா (56) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் அவர்கள் 3 பேரும் சென்னை போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விழுப்புரம் நகர போலீசார், சென்னை புழல் சிறைக்கு சென்று அங்கிருந்த ஷியாவல் உள்ளிட்ட 3 பேரையும் விழுப்புரம் தலைமை தபால் நிலைய கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.