ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைப்பு
ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைப்பு
கூடலூர்
கூடலூர் அருகே ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகா தேவாலா, நாடுகாணி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து வீடுகள், கடைகளை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் சேதப்படுத்தும், வீடுகளை சீரமைக்க வனத்துறையினர் இழப்பீடு தருவதில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டக்கோரி, தேவாலா, நாடுகாணி பகுதியில் மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கும்கி யானைகள் வரவழைப்பு
பேச்சுவார்த்தையில், காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். அதன்படி, கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசிடம் தொலைபேசியில் பேசினார்.
இதைத்தொடர்ந்து முதுமலை தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் கும்கி யானைகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நாடுகாணி தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்காவுக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு சீனிவாசன் என்ற கும்கி யானை முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்டது.
தேடுதல் வேட்டை
பின்னர் வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானைகள் எந்த பகுதியில் முகாமிட்டுள்ளது என வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நாடுகாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் காட்டு யானைகளை தேடும் பணியில் சிரமங்கள் ஏற்பட்டது.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு மிதமான வெயில் தென்பட்டது. அப்போது பொன்னூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் நிற்பதை வனத்துறையினர் கண்டனர். இதைத்தொடர்ந்து கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானைகளை விரட்டும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால் மீண்டும் கடும் பனி மூட்டம் நிலவியதால் வனத்துறையினரால் காட்டு யானைகளை உடனடியாக விரட்ட முடியவில்லை. இதன் காரணமாக வனத்துறையினர் மற்றும் கும்கி யானைகளின் பாகன்கள் கடும் அவதியடைந்தனர்.
சிறப்பு குழு அமைப்பு
இதுகுறித்து வனச்சரகர் பிரசாத் கூறுகையில், ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட 25 நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகளை விரட்டுவதற்காக 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், நாடுகாணி பகுதியில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் காட்டு யானைகளை தேடும் பணி தொய்வடைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து காட்டு யானைகளை கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.