காருடன் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்
நத்தம் அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், ரியல் எஸ்டேட் அதிபர் காருடன் கடத்தப்பட்டார். அவரை கடத்திய 10 பேர் கொண்ட கும்பலை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செந்துறை:
ரியல் எஸ்டேட் அதிபர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பெரியமலையூர்-வலசு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் இவர், சொந்த வேலை காரணமாக தனது உறவினர்கள் மாக்கன், பழனிச்சாமி ஆகியோருடன் நத்தம் சென்றார்.
பின்னர் அவர்கள் 3 பேரும், பெரியமலையூர்-வலசு நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். நத்தம்-செந்துறை சாலையில், குட்டுப்பட்டி தி.நகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து 3 கார்கள் வந்தன. சினிமாவை மிஞ்சும் வகையில், அந்த 3 கார்களும் பெரியசாமியின் காரை வழிமறித்து திடீரென நிறுத்தப்பட்டன.
காருடன் கடத்தல்
பின்னர் அந்த கார்களில் இருந்து 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் திபு, திபுவென கீழே இறங்கினர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள், பெரியசாமியின் காரை சூழ்ந்து கொண்டனர்.
இதனால் பெரியசாமி மற்றும் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்தனர்.
மாக்கன், பழனிச்சாமி ஆகியோரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எச்சரித்து அனுப்பி விட்டு, பெரியசாமியை மட்டும் குண்டு கட்டாக தூக்கி வேறு காரில் ஏற்றினர். பின்னர் கார் மின்னல் வேகத்தில் பறந்தது.
இதேபோல் பெரியசாமி வந்த காரை, அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் ஓட்டி சென்றான். பெரியசாமி, காருடன் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் எண் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து, நத்தம் போலீஸ் நிலையத்தில் மாக்கன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, பெரியசாமியை தேடும் பணியை முடுக்கி விட்டனர்.
இதற்கிடையே பெரியசாமியுடன் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் செல்போன் எண்கள் மற்றும் பெரியசாமியின் செல்போன் எண்ணின் செயல்பாடு பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையப்பட்டி பகுதியில் பெரியசாமி மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான தனிப்படையினர் அங்கு விரைந்தனர்.
போலீசில் ஒப்படைப்பு
போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த கடத்தல் கும்பல், சருகுவலையப்பட்டியில் உள்ள கல்குவாரி அருகே பெரியசாமியை இறக்கி விட்டு கார்களில் தப்பி சென்று விட்டனர்.
வாயில் துணி திணிக்கப்பட்டும், கை, கால்கள் கட்டிய நிலையிலும் அங்கு பெரியசாமி கிடந்தார். இதனை, அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், கட்டுகளை அவிழ்த்து பெரியசாமியை மீட்டனர்.
இதற்கிடையே தனிப்படை போலீசாரும் அங்கு சென்றனர். அவர்களிடம், பெரியசாமி ஒப்படைக்கப்பட்டார். பின்னர் நத்தம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பணம் பறிக்க முயற்சி
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ரியல் எஸ்டேட் பங்குதாரரும், பெரியசாமியின் நண்பருமான பாக்கியராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல் தான் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெரியசாமியிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் கடத்தப்பட்டிருக்கிறார். ஆனால், போலீசார் தங்களை நெருங்கிய காரணத்தினால் வேறு வழியின்றி பெரியசாமியை அவர்கள் விட்டு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் கடத்தலில் ஈடுபட்ட பாக்கியராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.