மாதா பேராலய விழாவில் பங்கேற்க பக்தர்கள் நேரில் வரவேண்டாம்
வேளாங்கண்ணி மாதா பேராலய விழாவில் பங்கேற்க பக்தர்கள் நேரில் வரவேண்டாம் என பேராலய அதிபர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி மாதா பேராலய விழாவில் பங்கேற்க பக்தர்கள் நேரில் வரவேண்டாம் என பேராலய அதிபர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாங்கண்ணி மாதா பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு விழா 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ெகாடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பேட்டி
இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் பிரபாகர் நேற்று பேராலய விழாவிற்கான பத்திரிகையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
தற்போது கொரோனா பரவலை தடுக்க பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு மற்றும் திருச்சபை வழங்கும் ஒழுங்கு நடைமுறைகளை பேராலய நிர்வாகம் கடைபிடித்து 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெறும். திருப்பலிகள் பேராலயத்துக்குள் நடைபெறும்.
பக்தர்கள் நேரில் வர வேண்டாம்
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கொடியேற்றம், நவநாள் மற்றும் திருப்பலிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். விழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.