2 குழந்தைகளை கொன்று விட்டு நேபாள பெண் தற்கொலை

2 குழந்தைகளை கொன்று விட்டு நேபாள பெண் தற்கொலை

Update: 2021-08-26 16:26 GMT
பேரூர்

பேரூர் அருகே 2 குழந்தைகளை கொன்று விட்டு நேபாள பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

நேபாளத்தை சேர்ந்தவர்கள்

கோவை மாவட்டம் பேரூரை அடுத்த மாதம்பட்டி ஊராட்சி குப்பனூருக்கு தெற்கே மாரப்பன் தோட்டம் உள்ளது. 

இங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி நேபாள நாட்டை சேர்ந்த ஆதித்ய பண்டாரி (வயது 24) என்பவர் மாட்டுப்பண்ணை மற்றும் விவசாய வேலைகளை கடந்த 8 மாதமாக வேலை செய்து வருகிறார். 

அவருடன் மனைவி தன்கலா (வயது 22), குழந்தைகள் ருத்ரா (3), அலிஷா (1) மற்றும் தாய் தேவி பண்டாரி ஆகியோரும் வசித்து வந்த னர். ஒரு வாரத்துக்கு முன்பு தேவி பண்டாரி நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார். 

கதவை உடைத்தார்

நேற்று காலையில் ஆதித்யபண்டாரி வீட்டில் இருந்து புறப்பட்டு  வழக்கம் போல் தோட்டத்து வேலைக்கு சென்றார். 

அவர் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது. அவர் நீண்ட நேரமாக தட்டியும் கதவை திறக்க வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த அவர் வீட்டின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை கையால் அடித்து உடைத்தார்.

 இதில் அவருடைய கையில் ரத்தகாயம் ஏற்பட்டது. அதன்பிறகும் வீட்டிற்குள் இருந்து சத்தம் ஏதும் வர வில்லை.

பிணமாக தொங்கினர்

இதனால் பதற்றம் அடைந்த ஆதித்யபண்டாரி, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். 

வீட்டுக்குள் இருந்த கம்பியில் துப்பட்டாவில் தூக்குமாட்டிய நிலையில் தன்கலா மற்றும் குழந்தைகள் ருத்ரா, அலிஷா ஆகியோர் பிணமாக தொங்கினர். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதித்யபண்டாரி, மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதார். 

பின்னர் அவர் அரிவாளால் துப்பட்டாவை அறுத்து மனைவி மற்றும் குழந்தைகளை தூக்கில் இருந்து கீழே இறக்கினார்.  

குழந்தைகள் கொலை

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

 அவர்கள், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 குழந்தைகளை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து தன்கலா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படு கிறது. 

ஆனால் அதே நேரத்தில் 2 குழந்தைகளை கொன்று விட்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன?. குடும்ப தகராறு காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவரிடம் விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யபண்டாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

இதில், தன்கலா, தீராத தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டதாகவும், இதனால் கணவரிடம் கோபப்பட்டு தகராறு செய்து வந்ததும் தெரிய வந்தது.

தன்கலாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. எனவே இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

2 குழந்தைகளை கொன்று விட்டு நேபாள நாட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்