ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு இடிந்து மூதாட்டி பலி

வீடு இடிந்து மூதாட்டி பலி

Update: 2021-08-26 16:03 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு இடிந்து மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள் மனைவி வேம்பு அம்மாள்  (வயது 73). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் கேரளாவில் வசித்து வருகிறார். 
பெருமாள் இறந்து விட்டதால் வேம்பு அம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் வசித்து வந்த வீடு அரசின் தொகுப்பு வீடு என்று கூறப்படுகிறது. இதனால் வீடு பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்டது
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வல்லகுளம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வேம்பு அம்மாளின் வீடு மழைநீரில் நனைந்து காணப்பட்டது. 
வீடு இடிந்து பலி
நேற்று முன்தினம் இரவில் வேம்பு அம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய வேம்பு அம்மாளை மீட்டனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி வேம்பு அம்மாள் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சேரகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் விசாரணை நடத்தி வருகிறார். 
ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்