வடநெம்மேலி முதலை பண்ணை திறப்பு; சுற்றுலா பயணிகள் வருகை தந்து ரசித்தனர்

வடநெம்மேலி முதலை பண்ணை 4 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்து ரசித்தனர்.

Update: 2021-08-26 10:47 GMT
சதுப்பு நில முதலைகள்
ஆசியாவிலேயே பெரிய முதலை பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கும் சென்னைக்கும் மத்திய பகுதியில் வடநெம்மேலியில் அமைந்துள்ள முதலை பண்ணையாகும். இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன.அதேபோல் ஆப்பிக்கா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழும் மனிதர்களை விழுங்கும் ராட்சத முதலைகளும் இங்கு உள்ளன.

அல்டாப்ரா வகை ஆமைகள்
இந்த முதலை பண்ணையில் தற்போது 1,800 முதலைகள் உள்ளது. ஆண்டுக்கு 300 முதலை குஞ்சுகள் உற்பத்தியாகி வளருகின்றன. முதலைகள் மட்டுமில்லாமல் லட்சக்கணக்கில் விலை மதிப்புள்ள அல்டாப்ரா வகை ஆமைகள், நட்சத்திர ஆமைகள், பச்சோந்திகள், கொமோடா டிராகன் போன்றவையும் இங்குள்ள தொட்டிகளில் வைத்து பராமரிக்கப்படுகிறது.முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும் முதலைகள் சில நேரத்தில் தன் குட்டிகளை கடித்து தின்றுவிடுவதால் குட்டி முதலைகள் இங்கு தனியாக தண்ணீர் நிரப்பிய கண்ணாடி தொட்டியில் வைத்து ஊழியர்கள் அதனை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.

வழிகாட்டி நெறிமுறைகள்
இந்த நிலையில் கொரோனா தொற்றால் கடந்த 4 மாதமாக மூடப்பட்ட முதலை பண்ணை தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் நேற்று திறக்கப்பட்டது. கிருமி நாசினியால் கைகளை கழுவி சுத்தம் செய்தபிறகு முக கவசம் அணிந்து வந்த பயணிகளே இங்கு நுழைவு கட்டணம் செலுத்தி முதலைகளை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.குறிப்பாக மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதால், முதலைகள் அருகில் நின்று பார்க்கும் பயணிகள் யாரும் திண்பண்டம் எதுவும் முதலைகளுக்கு வழங்க கூடாது என முதலை பராமரிப்பாளர்கள் அறிவுறுத்தி அனைத்து இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.கண்ணாடி தொட்டிகளில் முதலை குஞ்சுகள் பராமரிப்பு முறைகள் குறித்து அதன் ஊழியர்கள் சுற்றுலா பயணிகளுக்கு விரிவாக விளக்கி கூறினர். 4 மாதங்களுக்கு பிறகு முதலை பண்ணை திறக்கப்பட்டதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் குடும்பம், குடும்பாக இங்கு வந்திருந்ததை காண முடிந்தது. குறிப்பாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் கட்டணம் மூலமே கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மரத்தடி நிழலில் செல்பி
ஆனால் இங்கு பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நுழைவு கட்டண மையத்தில் பணப்பரிமாற்றம் மூலமே நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டன. 4 மாதங்களுக்கு பிறகு இங்கு வந்ததால் சுற்றுலா பயணிகள் பலர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பலர் முதலை இருக்கும் தொட்டி அருகில் உள்ள மரத்தடி நிழலில் நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக இங்குள்ள முதலைகளுக்கு உணவு வழங்குவதற்காக முக்கிய பிரமுகர்கள் பலர் இங்குள்ள முதலைகளை தத்து எடுத்து உள்ளனர். அவர்கள் மூலம் முதலைகளுக்கு மருத்துவ உதவி, உணவு உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன.

மேலும் செய்திகள்