கடன் வாங்கி தருவதாக தொழில் அதிபர்களிடம் ரூ.4 கோடி சுருட்டல்; மோசடி ஆசாமி கைது
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 53). இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம், வங்கியில் கடன் வாங்கி தருவதாக கமிஷன் தொகை பெற்று ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் மும்பை போலீசாரால் தியாகராஜன் கைது செய்யப்பட்டார்.
மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை அண்ணாநகரைச்சேர்ந்த கவுசிக்பளிச்சா என்ற தொழில் அதிபரிடமும், வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2½ கோடியை தியாகராஜன் சுருட்டி விட்டார். இது தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் ஆகியோர் மேற்பார்வையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
மோசடி ஆசாமி தியாகராஜன் கைது செய்யப்பட்டு, மும்பையில் இருந்து நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ரூ.4 கோடி வரை மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.