கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள 4 இடங்கள் விரைவில் நிரப்பப்படும்
கர்நாடக மந்திரிசபையில் காலியாக இருக்கும் 4 இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமித்ஷாவை சந்தித்த பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரு: கர்நாடக மந்திரிசபையில் காலியாக இருக்கும் 4 இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமித்ஷாவை சந்தித்த பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அமித்ஷாவுடன் சந்திப்பு
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் மத்திய மந்திரிகளை சந்தித்தார். நேற்று மாலையில் அவர் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து, கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லியில் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் அமித்ஷாவை சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். கர்நாடகத்தின் எனது(பசவராஜ் பொம்மை) தலைமையிலான புதிய அரசின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருப்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். மேலும் மந்திரிசபையில் மீதமுள்ள 4 இடங்களை விரைவில் நிரப்புவது குறித்தும் அவரிடம் பேசினேன். அந்த இடங்களை நிரப்ப அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதில் யார், யார் புதிய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
பா.ஜனதா பொதுக்கூட்டம்
அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந் தேதி உப்பள்ளியில் நடக்க உள்ள பா.ஜனதா பொது கூட்டத்திலும், கர்நாடக அரசின் நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.