நந்திமலையில் திடீர் நிலச்சரிவு; சுற்றுலா பயணிகள் சிக்கியதால் பரபரப்பு
நந்திமலையில் திடீர் நிலச்சரிவு; சுற்றுலா பயணிகள் சிக்கியதால் பரபரப்பு
பெங்களூரு: பெங்களூரு அருகே உள்ள நந்திமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நந்திமலையில் நிலச்சரிவு
பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில் பெங்களூருவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் நந்திமலைக்கு சென்று வருவது வழக்கம். மலையின் உச்சிக்கு மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும்.
இந்த நிலையில் கனமழை பெய்ததை அடுத்து நேற்று முன்தினம் நந்திமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஓட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்துக்கு தடை
இதனால் ஓட்டல்களில் தங்கிய சுற்றுலா பயணிகள் கீழே வர முடியாது நிலை ஏற்பட்டது. சுற்றுலா வளர்ச்சி வாரிய ஊழியர்கள் மூலம் அவர்கள் கால்நடையாக கீழே பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். சாலை சேதம் அடைந்துள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 20 நாட்களுக்கு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சுற்றுலா பயணிகள் நந்திமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து நந்திமலை சிறப்பு அதிகாரி கோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காயமின்றி உயிர் தப்பினர்
நந்திமலையில் கடந்த 24-ந் தேதி இரவு கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று (நேற்று முன்தினம்) நிலச்சரிவு ஏற்பட்டது. மலைக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மலைக்கு செல்ல தற்காலிக ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு கோபால் கூறினார்.
30 சுற்றுலா பயணிகள்
கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் காபு சித்தலிங்கசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சுற்றுலா வளர்ச்சி வாரியம், நந்திமலையில் உள்ள ஓட்டல்கள்-தங்கும் விடுதிகளை நடத்துகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த விடுதிகளில் சுமார் 30 சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நந்திமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்களில் தங்கிய சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்கள், சுற்றுலா வளர்ச்சி வாரிய ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை கால்நடையாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து கொண்டு வந்துவிட்டனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நந்திமலையில் உள்ளது. நிலச்சரிவால் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்பட்டதும் அவர்களின் வாகனங்கள் கீழே கொண்டு வரப்படும். அந்த சுற்றுலா பயணிகளை பஸ்களில் பெங்களூரு நகருக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காபு சித்தலிங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா அந்த இடத்திற்கு நேரில் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தார். சாலையை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.