தந்தை-மகன்கள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து

தந்தை-மகன்கள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-08-25 20:57 GMT
கபிஸ்தலம்;
சுவாமிமலை அருகே வாழை இலை விற்பனை செய்வது தொடர்பாக உறவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தந்தை-மகன்கள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாழை இலை வியாபாரம்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் ஆற்றங்கரை தெருவில் வசித்து வருபவர் செல்வம்(வயது 46). இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன்கள் வசந்த்(20), சஞ்சய்(18) ஆகிய இருவரும் தந்தைக்கு உதவியாக இருந்து வருகின்றனர்.
செல்வத்தின் சித்தப்பா ராமலிங்கம் மற்றும் அவரது மகன்கள் குமார், முருகானந்தம், ஆகிய மூவரும் செல்வத்திடம், தாங்களும் வாழை இலை வியாபாரம் செய்வதற்கு கும்பகோணத்தில் கடை பிடித்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு செல்வம் சரி என்று கூறியுள்ளார். ஆனால் இவர்களுக்கு செல்வம் கடைபிடித்து தரவில்லை என்று தெரிகிறது.
தந்தை-மகன்களுக்கு கத்திக்குத்து
தங்களுக்கு கடை பிடித்து தராததால் செல்வம் மீது ராமலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் மற்றும் அவரது மகன்கள் குமார், முருகானந்தம் ஆகிய 3 பேரும் குடிபோதையில் செல்வத்தின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.  
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குமார், முருகானந்தம், ராமலிங்கம் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் செல்வம் மற்றும் அவரது மகன்கள் வசந்த், சஞ்சய் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தினர்.
கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த தந்தை-மகன்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
3 பேருக்கு வலைவீச்சு
இந்த மோதல் தொடர்பாக செல்வம் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான ராமலிங்கம் மற்றும் அவரது மகன்கள் குமார், முருகானந்தம் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்