விபத்தில் தொழிலாளி சாவு
பாவூர்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம்:
தென்காசி கடையத்து தெரு முகமது ஹனீபா மகன் இஸ்மாயில் மைதீன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் கீழப்பாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, மீண்டும் பாவூர்சத்திரம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். கீழப்பாவூர்- பாவூர்சத்திரம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
மேலும் மோதிய மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் மைதீன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளையும், அதை ஓட்டி வந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.