ஜெயங்கொண்டத்தில் கோவில் கலசங்கள் திருட்டு

கோவில் கலசங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2021-08-25 20:03 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெரு கடியாங்குளம் ஏரிக்கரை முன்பு வீரனார் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் கடந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் ஏராளமானோர் கூடி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோவில் கோபுரத்தில் இருந்த இரண்டு கலசங்களை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் பூசாரி செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர்ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு கோவிலுக்கு விரைந்து வந்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்குள்ள கொட்டகையில் 2 கொசுவர்த்தி சுருள் எரிந்த நிலையிலும் மற்றும் ஸ்டேன்ட் ஒன்றும் கிடந்ததால் மர்ம நபா்கள் தூங்கி விட்டு நள்ளிரவு எழுந்து கோபுர கலசங்களை திருடிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.  இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்