நடப்பாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் நடப்பு நிதியாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க மத்திய அரசு ரூ.1900 கோடி மானியம் வழங்கி உள்ளதாக கோட்ட அதிகாரி பேசினார்.

Update: 2021-08-25 19:26 GMT
சிவகாசி, 
கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் நடப்பு நிதியாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க மத்திய அரசு ரூ.1900 கோடி மானியம் வழங்கி உள்ளதாக கோட்ட அதிகாரி பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
திருத்தங்கலில் கதர் கிராம தொழில்கள் ஆணையம், கதர் கிராம தொழில்கள் வாரியம், மாவட்ட தொழில்மையம் ஆகியவை இணைந்து  பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமினை நேற்று நடத்தியது. 
இதில் ராமநாதபுரம் மத்திய சர்வோதய சங்கத்தின் செயலாளர் காளியப்பன் வரவேற்றார்.
 கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குனர் அசோகன் தலைமை வகித்து பேசியதாவது:-
மத்திய சிறு, நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் உள்ளது. இதன் தலைமை இடம் மும்பையில் செயல்படுகிறது.
6 லட்சம் பேர்
நடப்பு நிதியாண்டில் ரூ.1900 கோடி நிதியை ஒதுக்கி 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. கடந்த வருடம் தமிழகத்துக்கு மட்டும் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
 இதில் 44 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தொழில் தொடங்கும் போது என்ன தொழில் தொடங்க வேண்டும் என்று யோசித்து தொடங்க வேண்டும். நீங்கள் தொழில் தொடங்கி பொருட்களை உற்பத்தி செய்தால் அந்த பொருட்கள் தரமானதாக இருந்தால் அதை விற்பனை செய்யவும் கதர் கிராம தொழில்கள் ஆணையகம் ஏற்பாடு செய்யும். எனவே தொழில் தொடங்க அனைவரும் முன்வர வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கதர் கிராம தொழில்கள் ஆணையத்தை சேர்ந்த அன்புச்செழியன், கோமதிநாயகம், விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், ஜெயசெல்வம், தங்கலட்சுமி, முத்து தையல் பயிற்சி நிலைய நிறுவனர் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் உதவி இயக்குனர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்