பயிர்களை தேர்வு செய்து பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள்

விவசாயிகள் தங்கள் பகுதியில் எந்த வகையான பயிர்களை பயிரிட்டால் நல்ல பயனடையலாம் என்பதை அறிந்து பயிரிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

Update: 2021-08-25 17:41 GMT
சிவகங்கை, 
விவசாயிகள் தங்கள் பகுதியில் எந்த வகையான பயிர்களை பயிரிட்டால் நல்ல பயனடையலாம் என்பதை அறிந்து பயிரிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
குழுகூட்டம்
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மாவட்ட இயக்கக்குழுக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.மேலும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரிட்டு பயன்பெறும் வகையில் தேவையான வேளாண் உபகரணங்கள், சொட்டு நீர் உபகரணங்கள், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் போன்ற திட்டங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். 
அதேபோல் விவசாயிகள் அதிகஅளவு காய்கறி பயிர் செய்யவும் மற்றும் இயற்கை பண்ணைய திட்டத்தை அதிகஅளவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க வேண்டும். இதேபோல், 12 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் பழவகை கன்றுகள், சொட்டு நீர் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. 
பசுமைகுடில்
மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்த வேண்டும். அதேபோல் இந்த பகுதியில் பசுமைக்குடில் மூலம் வௌ்ளரி விவசாயம் நன்றாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட வேளாண் மைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் விவசாயிகளும் தங்கள் பகுதியில் எந்த வகையான பயிர்களை பயிரிட்டால் நன்கு பயனடையலாம் என்பதை அறிந்து அலுவலர்களின் ஆலோசனையின்படி அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் .வெங்கடேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வானதி, முன்னோடி வங்கி மேலாளர் .இளவழகன், முன்னோடி விவசாயி ஆப்பிரகாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்