விராலிமலை அருகே கத்திமுனையில் லாரி டிரைவரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

லாரி டிரைவரை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-08-25 17:38 GMT
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வல்லத்திராக்கோட்டை காடையன்தோப்பை சேர்ந்தவர் நடராசன் (வயது 43). லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை டாரஸ் லாரியில் திருவண்ணாமலையிலிருந்து மதுரைக்கு சீனி லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது விராலிமலை, காளப்பனூர் பஸ் நிறுத்தம் அருகே டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு சாலையின் ஓரம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். 
அப்போது டிரைவரின் பின்பக்கமாக வந்த 2 மர்மநபர்கள் நடராசன் கழுத்தில் கத்தியை வைத்து அவரின் கை, கால்கள் மற்றும் வாயை கட்டிப்போட்டு மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். அதற்கு நடராசன் பணம் லாரியில் இருப்பதாக கூறினார். பின்னர் மர்மநபர் ஒருவர், நடராசனுடன் அவ்விடத்திலேயே உட்கார்ந்து இருந்தார். மற்றொரு நபர் லாரியின் டிரைவர் சீட்டின் கீழே வைக்கப்பட்டு இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர் அந்த மர்மநபர்கள் கட்டி வைத்திருந்த நடராசனை அவிழ்த்து விட்டு, அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டனர்.  இதுகுறித்து நடராசன் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்