செங்கல் வியாபாரி பலி
டிராக்டர் மீது கார் மோதி செங்கல் வியாபாரி பலியானார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள புல்லங்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பன் என்பவரின் மகன் ராமு (வயது58). செங்கல் வியாபாரம் செய்துவரும் இவர் நேற்று காலை டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அருகே ஐந்தினை பூங்காவை ஒட்டிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் பழுதானது. இதனால் வண்டியை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிட்டு பழுதானதை தெரிவித்து எச்சரிக்கும் வகையில் டிராக்டரில் இருந்த செங்கற்களை எடுத்து வண்டியை சுற்றி அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருப்புல்லாணி நோக்கி கோவிலுக்கு சாமிகும்பிட சென்று கொண்டிருந்த கார் டிராக்டரின் மீது மோதி ஓரத்தில் செங்கல் வைத்து கொண்டிருந்த ராமு மீது மோதி தூக்கி வீசியது.
இதில் படுகாயமடைந்து ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கொட்டகை பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சிவகுமார் (47), உடன் வந்த தனிச்சியம் பகுதியை சேர்ந்த மாதவ செல்வம் மகன் பிரபாகரன் (29) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பிரபாகரனுக்கு தோள்பட்டை பகுதியில் 18 தையல் போட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.