தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உட்பட 9 பேருக்கு பிடிவாரண்டு

சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட 9 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உளுந்தூர்பேட்டை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது

Update: 2021-08-25 17:04 GMT
உளுந்தூர்பேட்டை

ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் கலந்துகொள்வதற்காக வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20 வாகனங்களில் வந்தார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்து காரில் இருந்து இறங்கிய வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள்.

ஆஜராகவில்லை 

இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது த.வா.க. நகர செயலாளர் முரளி உள்பட 5 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். வேல்முருகன் உள்பட மீதமுள்ள 9 பேர் ஆஜராகவில்லை.  

பிடிவாரண்டு

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 9 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி சண்முகநாதன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்