குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

நவமலையில் மீன் பிடிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-08-25 16:52 GMT
பொள்ளாச்சி

நவமலையில் மீன் பிடிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மீன்பிடிக்க சென்றனர் 

பொள்ளாச்சி அருகே ஆழியாறை அடுத்த நவமலையை சேர்ந்த வர் காளியப்பன் (வயது 66). இவர் ஒரு தனியார் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மருதாள். 

காளியப்பன், தனது நண்பரான முத்துப்பாண்டி என்பவருடன் அந்த பகுதியில் உள்ள சொறுக்கல் என்ற குட்டையில் மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் முத்துப்பாண்டி மட்டும் வீடு திரும்பி உள்ளார். காளியப்பனை காணவில்லை. 
வீடு திரும்பவில்லை 

இதையடுத்து மருதாள், முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்று கேட்டதற்கு காளியப்பன் வரவில்லை என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் மாலையில வெகுநேரமாகி விட்டதாலும் அந்தப்பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்தது என்பதால் அங்கு செல்லவில்லை.

இந்த நிலையில் காளியப்பனின் உறவினர்கள் அந்த குட்டைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்  அணிந்து இருந்த வேட்டி, செருப்பு மட்டும் கரையோரத்தில் இருந்தது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் மீட்பு 

உடனே இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய காளியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளியப்பன் உடலை மீட்டனர். 

போலீசார் விசாரணை 

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர் முத்துப்பாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

 முதற்கட்ட விசாரணையில் காளியப்பனும், முத்துபாண்டியும் மது அருந்தி விட்டு மீன் பிடிக்க சென்றனர். அப்போது போதை யில் இருந்த காளியப்பன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. 

அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியபோதும் அவர் கேட்காமல் சென்றதால், முத்துபாண்டி அங்கிருந்து வந்துவிட்ட தாகவும், அப்போது அவர் அந்த குட்டையில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. 

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்