ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை கைப்பட எழுதிய 2 கடிதங்கள் சிக்கியதால் பரபரப்பு
ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய 2 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய 2 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதுநிலை மேலாளர்
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சஜய்குமார் (வயது 39). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்த அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த சில நாட்ளாக மனம் உடைந்து காணப்பட்டு இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
2 கடிதங்கள் சிக்கின
தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சஜய்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக சஜய்குமார் அணிந்து இருந்த ஆடைகளை சோதனையிட்டனர். அப்போது அவரது சட்டை பையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதமும், மலையாளத்தில் எழுதப்பட்ட இன்னொரு கடிதமும் இருந்தது.
பரபரப்பு
இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சஜய்குமாருடன் பணிபுரியும் அதிகாரி ஒருவர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள்.
இருந்தாலும் போலீசார் கைப்பற்றிய 2 கடிதங்களில் என்ன எழுதி இருந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கடிதங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருவதால் அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.