படகு சவாரிக்கு கூடுதல் கட்டணம் வசூல்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Update: 2021-08-25 14:22 GMT
கொடைக்கானல் :

 படகு சவாரி தொடக்கம்

‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் படகுகள் இயக்கப்பட்டன. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிைலயில் கொரோனா ஊரடங்கு தளர்வு எதிரொலியாக, கடந்த 23-ந்தேதி முதல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி தொடங்கப்பட்டது. 

தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகுகள் மட்டுமே இயக்்கப்படுகின்றன. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சவாரி செய்து வருகின்றனர். 

 கூடுதல் கட்டணம் வசூல்

அதேநேரத்தில் படகு சவாரி செய்வதற்கு, சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 2017-ம் ஆண்டில் படகு சவாரிக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது கட்டணம் உயர்த்தி இருப்பதால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இருவர் மட்டுமே செல்லக்கூடிய பெடல் படகு கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும், 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய பெடல் படகு கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஓட்டுனர் மூலம் இயக்கப்படக்கூடிய 6 நபர்கள் செல்லக்கூடிய படகுக்கான கட்டணம் ரூ.330-ல் இருந்து ரூ.400 ஆக அதிகரித்துள்ளது. திடீரென உயர்த்தப்பட்ட கட்டணத்தினால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கொடைக்கானல் நகராட்சி படகு குழாமில், இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து படகுகளும் இயக்கப்பட உள்ளன என்று நகராட்சி ஆணையாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
----------

மேலும் செய்திகள்