சேலம் மாவட்டம் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை-ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அனைத்து இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அனைத்து இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், கூடுதல் இயக்குனர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
குடிநீர்
சேலம் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையாகவும், தட்டுப்பாடின்றியும் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகள் முழுமையாக நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
குடிநீர் முழுமையாக அனைத்து இடங்களில் உள்ள பொதுமக்களின் தேவைக்கேற்ப தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து துரிதமாக பணியாற்ற வேண்டும்.
பராமரிப்பு பணிகள்
முறையற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டால் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி துறை அலுவலர்கள், காவல்துறை மூலம் அதனை அகற்ற தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளை குடிநீர் வினியோகம் தடைபடாமல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர், நிர்வாக பொறியாளர்கள் குணசேகரன், செங்கோடன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொ) கணேசமூர்த்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.