2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

தஞ்சையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது.

Update: 2021-08-24 21:17 GMT
தஞ்சாவூர்;
தஞ்சையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது. இந்த மழை காரணமாக குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 நாட்கள் தொடர்ந்து மழைபெய்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வழக்கத்தை விட வெயில் அதிகமாக காணப்பட்டது.
மதியத்துக்குப்பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மதியம் 3.10 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. பலத்த மழையாக பெய்தது. பின்னர் சிறிது நேரம் நின்றிருந்த மழை மீண்டும் பலத்த மழையாக கொட்டியது. 2 மணி நேரத்துக்கும் மேல் இந்த மழை நீடித்தது.
சாலைகளில் பெருக்கெடுத்தது
இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிகாணப்பட்டது. அண்ணாசிலை, சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. திடீரென பெய்த மழை காரணமாக வெளியே சென்றிருந்தவர்கள் நனைந்த படியே வீடு திரும்பினர்.
தஞ்சை மேலவீதி பகுதியில் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் வடக்கு வீதி பகுதியிலும் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் தஞ்சை நகரில் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிசெய்துள்ளனர். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்