தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சி 24 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இதில் முக்கிய நகர் பகுதியில் உள்ள வார்டுகளில் தனியார் தூய்மை பணியாளர்கள் கொண்டு காலை மற்றும் மாலை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கக்கோரி சீர்காழி நகராட்சி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தின் போது தினக்கூலி பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.400 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தினசரி வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.320-ல் இருந்து ரூ.370 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.