உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை கொள்ளை
திண்டிவனம் அருகே பட்டப்பகலில் உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே மானூர் அடுத்த கண்ணன் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 39). எண்டியூரில் உள்ள அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகம்மாள் (34). இவர் மேல்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணி காரணமாக தங்களது பள்ளிகளுக்கு சென்றனர்.
பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே வீட்டுக்குள் சென்றுபார்த்தனர்.
பீரோ உடைப்பு
அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேசென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
வலைவீச்சு
தொடர்ந்து கைரேகை நிபுணர் சோமசுந்தரம் கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடத்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.