நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, அதில் 30 அட்டை பெட்டிகளில் 360 மதுபாட்டில்களும், கேன்களில் 60 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மேட்டுதாண்டவம் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 30), புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த பாலமுருகன் (29) என்பதும், புதுச்சேரியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அட்டைப்பெட்டிகளில் இருந்த மது பாட்டில்கள், சாராயம் மற்றும் அதனை கடத்த பயன்டுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.