நீலகிரியில் வனத்துறை சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும்
இயல்பு நிலை திரும்பி வருவதால் நீலகிரியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் என்று சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி
இயல்பு நிலை திரும்பி வருவதால் நீலகிரியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் என்று சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் வெறிச்சோடியது.
சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தங்கும் விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் என பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கோடை சீசனில் தங்கும் விடுதிகள் வழக்கமாக நிரம்பி வழியும்.
ஆனால் கொரோனா தொற்று பரவலால் விடுதிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பலரும் வேலையிழந்தனர்.
சுற்றுலா தலங்கள் திறப்பு
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள 2 படகு இல்லங்கள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீலகிரியில் சுற்றுலா சார்ந்த அனைத்து சங்கங்கள் சார்பில், முதல் கட்டமாக சுற்றுலா தலங்கள் திறந்ததற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால், அதனை சார்ந்த வியாபாரிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன்மூலம் இயல்புநிலை திரும்பி வருகிறது.
கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும்
இதுகுறித்து சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், நீலகிரியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, குன்னூர் டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட வில்லை. இதை நம்பி உள்ளவர்கள் 4 மாதங்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வனத்துறை சுற்றுலா தலங்களை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அப்போது தான் கொரோனாவால் முடங்கிபோன சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றனர்.