தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வனத்துறை நடவடிக்கையை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது அவர்கள், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, மேகமலை பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகளை விவசாயம் செய்யவிடாமல் வனத்தை விட்டு வெளியேற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே வனத்துறை இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மேகமலை, வருசநாடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வனத்துறை அமைச்சர் மற்றும் நிதிஅமைச்சர் ஆகியோரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், நீண்டகாலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சியை வனத்துறையும், அரசும் கைவிட வேண்டும். சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் சம்பந்தமே இல்லாமல் தேனி மாவட்டத்தில் வன விவசாயிகளை வெளியேற்றுவோம் என்று பேசி இருப்பது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது விவசாயிகள் பக்கம் நின்று தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்றது. தற்போது அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.