சேவூர் அருகே நிலத்தகராறில் முதியவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேவூர் அருகே நிலத்தகராறில் முதியவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேவூர்:
சேவூர் அருகே நிலத்தகராறில் முதியவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வீட்டு வாசலில் ரத்தக்கறை
அவினாசியை அடுத்த சேவூர் அருகே ராமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 80). இவருடைய மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு கவுதமி என்ற மகள் உள்ளார். இவர் திருமணமாகி ஈரோடு மாவட்டம் கோபியில் வசித்து வருகிறார். வெங்கடாசலத்தின் தங்கை பொன்னம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்டதால் வெங்கடாசலத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி ஆடுகளை மேய்க்க சென்ற பொன்னம்மாள் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வெங்கடாசலத்தை காணவில்லை. மேலும் வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இந்த ரத்தக்கறை வெங்கடாசலம் வீட்டு வாசலில் இருந்து பக்கத்து வீட்டை சேர்ந்த ராசுவின் மகன் சந்தோஷ் (25) வீட்டின் வாசல் வரை உறைந்து கிடந்தது. மேலும் சந்தோஷ் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பொன்னம்மாள் இது குறித்து சேவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கட்டையால் தாக்கி கொலை
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷ் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் வெங்கடாசலம் சாக்கில் கட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்களுக்குள் ஏற்கனவே நிலத்தகராறு இருந்துவந்துள்ளது. கடந்த 22-ந்தேதி மாலை வீட்டில் வெங்கடாசலம் தனியாக இருந்துள்ளார். அப்போது சந்தோஷ் அங்குசென்று கட்டையால் தாக்கியதில் வெங்கடாசலம் உயிரிழந்தார். பின்னர் அவரை சாக்கில் போட்டு கட்டி தனது வீட்டின் சமையல் அறையில் உடலை வைத்து விட்டு, வீட்டை பூட்டி விட்டு சந்தோஷ் தப்பி சென்று விட்டார்.
கைது
இதையடுத்து தலைமறைவாக உள்ள சந்தோசை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான 7 பேர் கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து சந்தோசை தேடி வந்தனர்.
இதற்கிடையில் ராமியம்பாளையத்தில் உள்ள குளத்துப்பகுதியில் சந்தோஷ் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, நேற்று காலை அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த சந்தோசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை நடந்த அன்று, சந்தோசின் வீட்டிற்கு அருகில் புல் பிடுங்கும் போது, வழக்கம் போல சந்தோசிற்கும், வெங்கடாசலத்திற்கும் இடையே இடத்தகராறு ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்து வெங்கடாசலத்தை கட்டையால் அடித்துக்கொலை செய்தேன் என்று சந்தோஷ் கூறினார்.