உப்பாறு அணைக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

உப்பாறு அணைக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-08-24 16:39 GMT
திருப்பூர்:
உப்பாறு அணைக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
உப்பாறு அணைக்கு தண்ணீர் 
கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில் நடப்பு மாதத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- 
உப்பாறு அணைக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உயிர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். காங்கேயம், வெள்ளகோவில், பி.ஏ.பி. 1 மற்றும் 3-ம் மண்டல பாசன பரப்பு, 48 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெற்று வந்தது. 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 7 நாள் அடைப்பு, 7 நாள் திறப்பு என்ற முறையில் பாசனம் பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக கடைமடை பாசனத்துக்கு சரிவர தண்ணீர் விடுவது கிடையாது. தலைமடை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தென்னை மட்டை தொழிற்சாலைக்கு தண்ணீர் கோடிக்கணக்கான லிட்டர் திருடப்படுகிறது. 
நீரூற்று நிபுணர் 
இதுபோல் பி.எம்.சி. வாய்க்கால் அருகில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் 2 கோடி, 3 கோடி லிட்டர் தண்ணீர் குளங்களை வெட்டி பாலித்தீன் கவரை போட்டு தேக்கி வைத்துக்கொள்கின்றனர். இதனால் பி.ஏ.பி. கடைமடை விவசாயிகளுக்கு முறையான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், கடைமடை விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திருட்டுத்தனமாக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தண்ணீர் பார்க்க நீரூற்று நிபுணர் தேவைப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நீரூற்று நிபுணர் இல்லாததால் அதிக பணம் கொடுத்து தனியார் ஆட்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்திற்கு நீரூற்று நிபுணரை அரசு நியமிக்க வேண்டும். 
யூரியா தட்டுப்பாடு 
மங்கலம் கால்நடை மருந்தகத்தில் அருகில் உள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவருகிறார்கள். தினசரி 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். பராமரிப்பு உதவியாளரும் இல்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ஊழியர்களை நியமிக்க வேண்டும். 
திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் போன்ற கிராமங்களை அருகாமையில் உள்ள வடக்கு வட்டத்தில் சேர்க்க வேண்டும். கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையும் நடத்த வேண்டும். அவினாசி பகுதியில் நிலக்கடலை சாகுபடி அதிகரித்துள்ளது. யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அவினாசி வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை விரிவுபடுத்த வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்