ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு பள்ளி ஆய்வக உதவியாளருக்கு 8 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

மாணவரிடம் ரூ.400 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-08-24 06:35 GMT
லஞ்ச ஒழிப்பு போலீசார்
திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கிருஷ்ணாகுப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆர்.கே. பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஆவார்.இவர் கடந்த 2012-ம் ஆண்டு மாணவராக பள்ளியில் பயின்றபோது, தனது ஓட்டுனர் உரிமத்தை பதிவு செய்வதற்கு உண்மை தன்மை அறிந்து சான்றளிக்கும் வண்ணம் பள்ளிக்கு சான்றிதழ்களை அனுப்பி வைத்துள்ளார். இதற்காக ராஜேஷ் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்த பாபு என்பவரை அணுகியுள்ளார். அப்போது பாபு ரூ.400 கொடுத்தால் சரி பார்த்து அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பணம் கொடுக்க விரும்பாத ராஜேஷ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேசிடம் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

8 ஆண்டுகள் சிறை
அப்போது ரூ.400-ஐ பாபு வாங்கியபோது, மறைந்திருந்த போலீசார், கையும் களவுமாக பாபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி வேல்ராஜ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக 4 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் என 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பாபுவை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்