பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் இயக்கம்

பெங்களூரு பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமும் ரூ.56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-23 21:40 GMT
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமும் ரூ.56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடத்திற்கு ஒருமுறை...

பெங்களூரு பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி (மைசூரு ரோடு) இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை கெங்கேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்று தற்போது சோதனை ஓட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகிற 29-ந் தேதி நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி பசவராஜ் பொமமை தொடங்கி வைக்க உள்ளார்.

இதையடுத்து, தற்போது பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி வரை இயக்கப்படும் மெட்ரோ ரெயில் கெங்கேரி வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரூ.56 கட்டணம்

ஆனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலை 7 மணியில் இருந்து 11 மணி வரையும், மாலை 4.30 மணியில் இருந்து 7.30 மணி வரை 5 நிமிடம் அல்லது 8 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் கூட்டத்தை பொறுத்து மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரம் குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். பையப்பனஹள்ளியில் இருந்து கெங்கேரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் பையப்பனஹள்ளியில் இருந்து கெங்கேரிக்கு செல்வதற்காக ரூ.56 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

55 கிலோ மீட்டர் தூரம்

தற்போது பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரை ரூ.45 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கெங்கேரி வரை அந்த ரெயில் செல்வதால் ரூ.56 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கெங்கேரி வரை மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கினால் ஒட்டு மொத்தமாக 55 கிலோ மீட்டருக்கு இயக்கப்படும்.
அதாவது நாகசந்திரா முதல் அஞ்சனபுரா வரை 30 கிலோ மீட்டர் தூரமும், பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை 25 கிலோ மீட்டர் என 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்