கொரோனா பரிசோதனைக்கு பயந்து தொழிலாளி தப்பி ஓட்டம்

உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி கொரோனா பரிசோதனைக்கு பயந்து தப்பி ஓடினார். வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Update: 2021-08-23 21:40 GMT
உப்பள்ளி: உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி கொரோனா பரிசோதனைக்கு பயந்து தப்பி ஓடினார். வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  

கட்டிட தொழிலாளி

தார்வார் மாவட்டம் கொப்பல் நகரை சேர்ந்தவா் சிவனகவுடா (வயது 48). இவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். 

இதற்காக அவர் மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஓட்டம்

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த வேண்டும் என்று டாக்டர்கள், அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்காது. எனக்கு கொரோனா பரிசோதனை வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் டாக்டர்கள், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். 

இதனால் பயந்துபோன சிவனகவுடா யாரிடமும் தெரிவிக்காமல் ஆஸ்பத்திரியை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த மருத்துவர்கள் வித்யாநகர் போலீசாருக்கு சம்பவம் பற்றி தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிவனகவுடாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

 ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய சிவனகவுடா தனது வீட்டிற்கு வந்து பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சிவனகவுடாவை பிடித்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்