பெங்களூருவில் கொதிகலன் வெடித்து 2 தொழிலாளிகள் சாவு

பெங்களூருவில், தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண்கள் உள்பட மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Update: 2021-08-23 21:39 GMT
கொதிகலன் வெடித்து பலியான சவுரவ், மனீஷ்.
பெங்களூரு: பெங்களூருவில், தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண்கள் உள்பட மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கொதிகலன் வெடித்தது

பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரம் 5-வது கிராசில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த அரசு பள்ளியின் கட்டிடத்தில் கடந்த 8 மாதங்களாக எம்.எம்.புட் என்ற பெயரில் தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் உரிமையாளராக விஜய் மேத்தா என்பவரும், பங்குதாரராக சச்சின் (வயது 35) என்பவரும் இருந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் தொழிற்சாலையில் தின்பண்டம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ் (25), சவுரவ் (25), தனலட்சுமி (52), சாந்தி (40) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். சச்சின் தொழிற்சாலையில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் தின்பண்டம் தயாரிக்க பயன்படுத்தும் கொதிகலன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

2 பேர் சாவு

இதில் மனீஷ், சவுரவ், தனலட்சுமி, சாந்தி, சச்சின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் தொழிற்சாலையின் மேற்கூரை சேதம் அடைந்ததுடன் அங்கு தீயும் பிடித்தது. இந்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 5 பேரையும் மீட்க முயன்றனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும், மாகடி ரோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் தொழிற்சாலைக்குள் இருந்த 15 சிலிண்டர்கள் எடுத்து வந்து வெளியே வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதற்கிடையே கொதிகலன் வெடித்ததில் படுகாயம் அடைந்து இருந்த மனீஷ், சவுரவ் பரிதாபமாக இறந்தனர். தனலட்சுமி, சாந்தி, சச்சின் படுகாயத்துடன் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

தொழிற்சாலை இயங்கி வந்த கட்டிடம் அரசு பள்ளிக்கு சொந்தமானது ஆகும். அந்த அரசு பள்ளியில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக அந்த பள்ளி திறக்கவில்லை. அந்த பள்ளி திறந்து இருந்தால் மாணவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த விபரீதமும் நடக்கவில்லை. மேலும் அனுமதியின்றி தொழிற்சாலை நடப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில் உயிரை இழந்த பரிதாபம்
தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து உயிரிழந்த மனீசும், சவுரவும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் 2 பேரும் கடந்த ஜூலை மாதம் தான் பணிக்கு சேர்ந்து உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலையில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு

பெங்களூரு கோபாலபுரத்தில் செயல்பட்டு வந்த தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 2 பேர் பலியாகி இருந்தனர். கொதிகலன் வெடித்த போது குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். அதிலும் விசாலாட்சி என்ற பெண் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார். 

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவி தனது வீடு வரை எரிந்ததாகவும், தனது சேலை தீயில் பட்டு கருகியதாகவும் விசாலாட்சி கூறினார். இதற்கிடையே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது என்று அக்கம்பக்கத்தினர் கூறியதால் அந்த தொழிற்சாலையில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த சில கைரேகைகளை பதிவு செய்து அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்து இருந்தனர்.

ஆம்புலன்ஸ் வர தாமதம்

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால் 45 நிமிடம் கழித்து ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் வந்ததாக தெரிகிறது. அதிலும் ஒரு ஸ்ட்ரெச்சர் தான் இருந்து உள்ளது. சம்பவம் நடந்த இடம் குறுகிய தெரு என்பதால் ஆம்புலன்சை உள்ளே கொண்டு வர முடியவில்லை என்று டிரைவர் அப்பகுதி மக்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்