வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-08-23 21:28 GMT
சுரண்டை:
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்துவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இதனால் அரசு ஆஸ்பத்திரி கட்டுவதற்கான நிதி திரும்ப பெறப்படும் நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து வீரகேரளம்புதூரில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் அரசு ஆஸ்பத்திரியை உடனே கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபடுவதாக அறிவித்தனர். 

அதன்படி நேற்று காலையில் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவாறு சாலையோரம் அமர்ந்து மறியலுக்கு முயன்றனர். வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஆட்டோ டிரைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆட்டோக்கள் ஓடவில்லை.

தொடர்ந்து வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வீரகேரளம்புதூரில் அரசு ஆஸ்பத்திரி விரைவில் கட்ட ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து கடைகளும் திறக்கப்பட்டன.

மேலும் செய்திகள்