சேரன்மாதேவி அருகே நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சேரன்மாதேவி அருகே நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-08-23 20:45 GMT
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூர் ராஜீவ்காந்தி நகரில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக குழி தோண்டப்பட்டு பணி மும்முரமாக நடைபெற்று, காலப்போக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 பெண்கள் உள்பட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகம்மது புகாரியிடம், குடிநீர் கேட்டு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதேபோல் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் ராஜீவ்காந்தி நகரில் குடிநீர் நல்லி அமைக்கக்கோரி, திடீரென சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மேலச்செவல் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் லோபாமுத்திரை பேச்சுவார்த்தை நடத்தினார். 10 நாட்களில் 2 பொதுநல்லி அமைத்து தருவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்