ஆசிரியையிடம் நகை பறித்த 4 வாலிபர்கள் கைது

குமாரபுரம் அருகே கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை அரிவாளால் வெட்டி நகையை பறித்த 4 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-23 20:16 GMT
பத்மநாபபுரம், 
குமாரபுரம் அருகே கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை அரிவாளால் வெட்டி நகையை பறித்த 4 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசிரியையிடம் நகை பறிப்பு
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே காயக்கரை பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 54), தொழிலாளி. இவருடைய மனைவி ராணி (52). இவர் மணலிகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
சம்பவத்தன்று மாலையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒரு வாலிபர் கால்வாய்க்குள் குளித்துக் கொண்டிருந்த ராணியை அரிவாளால் வெட்டி விட்டு 9 பவுன் நகையை பறித்து விட்டு தனது கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்த ராணியை அவருடைய கணவர் அருள்தாஸ் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதுகுறித்து அருள்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 
தனிப்படை அமைப்பு
மேலும், தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். அதில் இருந்த வாலிபர்களின் புகைப்படம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.  
அப்போது, அந்த புகைப்படத்தில் இருந்த ஒரு வாலிபர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான தனிப்படையினர் அந்த வாலிபரை தக்கலைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 
திருட்டு மோட்டார் சைக்கிளில்...
விசாரணையில், அவர் காட்டாத்துறை தெற்றை பகுதியை சேர்ந்த சஜின்குமார் (24) என்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதிைய சேர்ந்த நண்பர் விஜூ(29), குட்டகுழியை சேர்ந்த அஜிஸ்(26), சாமியார்மடத்தை சேர்ந்த பிரசாந்த்(24) ஆகியோருடன் சேர்ந்து தக்கலை மேட்டுக்கடையை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளரின் மோட்டார் சைக்கிளை திருடியுள்ளனர்.
அதன் பின்னர், அதே மோட்டார் சைக்கிளில் 4 பேரும் குமாரபுரம் அருகே காயக்கரையில் உள்ள கால்வாயில் குளித்த ஆசிரியை ராணியை அரிவாளால் வெட்டி நகையை பறித்து சென்றது தெரியவந்தது. பறித்த அந்த நகைைய சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு அடகுகடையில் விற்றதும், மோட்டார் சைக்கிளை திக்கணங்கோடு சந்திப்பில் விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. 
4 பேர் கைது
இதையடுத்து சஜின்குமார், விஜூ, அஜிஸ், பிரசாந்த் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, 9 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மீட்டனர். பின்னா், அவர்களை சிறையில் அடைத்தனர். அடிதடி வழக்கு தொடர்பாகவும் சஜின் குமார் மீது திருவட்டார் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, சஜின்குமார் உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்