இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் போல் போலி கையெழுத்திட்டு ஆவணம் தயாரித்த பெண் உள்பட 3 பேர் கைது
காணாமல் போன நில பத்திரத்துக்கு பதிலாக புதிதாக பெற இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் போல் போலி கையெழுத்திட்டு ஆவணம் தயாரித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அன்னவாசல்
காணாமல் போன நில பத்திரங்கள்
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது நிலப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போன நிலையில் புதிய ஆவணம் பெற முயன்றுள்ளார். அப்போது அவரை அணுகிய கோவை குனியமுத்தூரை சேர்ந்த மனோகரன், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் போலியாக ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுக்கலாம் என யோசனை கூறியுள்ளனர்.
இதற்கு சங்கீதா சம்மதம் தெரிவித்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சங்கீதாவின் நில பத்திரம் மற்றும் ஆவணங்கள் காணாமல் போனது போலவும், இதுதொடர்பாக இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது போலவும், அதற்கு சான்றாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பாலமுருகன் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு ஆவணம் தயார் செய்து அதனை கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
போலியாக ஆவணம் தயாரிப்பு
அந்த ஆவணங்களை சரிபார்த்த சார் பதிவாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து இதுகுறித்து உண்மைத் தன்மையை அறிய இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி அதிர்ச்சி அடைந்தார்.
அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தற்போது இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியில் இல்லாததும், அவரின் கையெழுத்து போலியாக போடப்பட்டு இருப்பதும், போலீஸ் நிலைய முத்திரையும் போலியாக தயாரித்து சீல் வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
பெண் உள்பட 3 பேர் கைது
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 41), மனோகரன் (42), ராஜேந்திரன் (47) ஆகிய 3 பேரை கைது செய்து கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், சங்கீதா திருச்சி சிறையிலும், மனோகரன், ராஜேந்திரன் ஆகியோர் அறந்தாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.