வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வேலூர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருகிற 26-ந் தேதி முதல் திறக்கப்படும் என வடஆற்காடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் கடந்த ஏப்ரல் மாதம் அதிகரிக்க தொடங்கியது. இதையொட்டி தொற்று தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 24-ந் தேதி சினிமா தியேட்டர்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மே மாதம் 10-ந் தேதி தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதன் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தமிழக அரசு, சினிமா தியேட்டர்கள், உயிரியல், தாவரவியல் பூங்காக்கள், கடற்கரை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பஸ் இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு நேற்று முதல் அனுமதி அளித்தது. சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க வேண்டும். தியேட்டரில் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.
ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
அரசின் அறிவிப்பை தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் தூய்மை பணிகள் நடைபெற்றன. சுமார் 4 மாதங்களாக தியேட்டர்கள் மூடிகிடந்ததால் அனைத்து இருக்கைகளையும் ஊழியர்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகளில் குறியீடு மற்றும் ரிப்பன் கட்டப்பட்டது.
தூய்மை, முன்னேற்பாடு பணிகள் மற்றும் புதிய படங்கள் வெளியாகாத காரணத்தால் நேற்று வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் படம் பார்க்க ஆவலுடன் தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
26-ந் தேதி திறக்கப்படும்
இதுகுறித்து வடஆற்காடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் கூறுகையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 60 தியேட்டர்களில் சுமார் 89 திரைகள் (ஸ்கிரீன்) உள்ளன. தியேட்டர்களை திறக்க அரசு திடீரென அனுமதி அளித்ததால் பல திரைகள் உள்ள தியேட்டர்களில் தூய்மை பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை.
மேலும், புதிதாக எந்த தமிழ் படங்களும் வெளியாகவில்லை. அதனால் வேலூர் உள்பட 4 மாவட்டங்களிலும் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) ஹாலிவுட் திரைப்படமான கான்ஜரிங்-3 வெளியாக உள்ளது. எனவே அன்றைய தினமே 4 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. கான்ஜரிங்-3 படத்தை திரையிடாதவர்கள் ஏற்கனவே வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்ற மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களை திரையிட உள்ளனர் என்று தெரிவித்தார்.