தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல அனுமதி
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆழியாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆழியாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா செல்ல அனுமதி
கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பாதிப்பு மற்றும் இறப்புகள் எண்ணிக்கை குறைந்தது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று வால்பாறைக்கு ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்தனர்.
கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் சுற்றுலா வரும் நபர்கள் கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை காண்பித்தால் தான் வால்பாறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசியை போட்டுக்கொள்ளாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு அனுமதி இல்லை.
முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
வால்பாறையில் வசிக்கும் மக்கள் அங்கு சென்று வருவதற்கு எந்த தடையும் இல்லை. இதற்கிடையில் பஸ்களில் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்கிறார்களா? என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.