வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகை- பணம் கொள்ளை

விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-08-23 17:31 GMT
விழுப்புரம், 

விழுப்புரம்- செஞ்சி சாலை அபிராமேஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி ஆனந்தி (வயது 32). விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் உள்ள இவருடைய தாய் ரங்கநாயகிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆனந்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை ஆனந்தி, தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

தடயங்கள் சேகரிப்பு 

இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளைபோன நகை, வெள்ளி குத்துவிளக்குள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்