கிராம நிர்வாக அதிகாரி உதவியாளர் மீது நடவடிக்கை
விவசாயி மீதான வழக்கை ரத்து செய்வதுடன், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
அன்னூர்
விவசாயி மீதான வழக்கை ரத்து செய்வதுடன், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
அன்னூர் விவசாயி
அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமி காலில் விழுந்து கிராம உதவியாளர் முத்துசாமி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. இது தொடர்பாக கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கும் மற்றொரு வீடியோ வெளியானது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் நடந்த சம்பவத்தை மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் முத்துசாமி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் சமீரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரியை நேரில் கூறினோம். முதலில் வந்த வீடியோ முழுமையானது அல்ல, கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பொய்யான தகவல்களை கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறினோம்.
அதற்கு அவர் விவசாயி தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று கூறிவிட்டார். அதற்கான ஆதாரம் கொடுத்து 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயி மீதான வழக்கும் ரத்து செய்யவில்லை.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோரை பணிநீக்கம் செய்வதுடன், முறையாக விசாரணை நடத்தாமல் இருந்த தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுபோன்று மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோரையும் விவசாயிகள் சந்தித்து மனு கொடுத்தனர்.